BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

17 மார்., 2018

பள்ளிக் கல்வி பட்ஜெட் 2018-2019.

 பள்ளிக் கல்வி பட்ஜெட் 2018-2019.


Posted: 15 Mar 2018 04:47 PM PDT

பள்ளிக் கல்வி 
 தமிழக சட்டசபையில் நேற்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:




தமிழக பள்ளி க்கல்வி துறை

102. அனைத்து குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதி செய்யவும், பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. 2016–-2017 மற்றும் 2017–-2018 ஆம் ஆண்டுகளில், 6 தொடக்கப் பள்ளிகள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ளதுடன், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 169 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 102 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2018-–2019 ஆம் ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். மேலும், இந்த அரசால் தற்போது கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 33,519 குழந்தைகளை 2018–-2019 ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 
103. மாறி வரும் சூழலில் எதிர்நோக்கியுள்ள சவால்களைச் சமாளிப்பதற்கு, தேசிய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரிய பாடத்திட்டங்களுடன் ஒப்பீடு செய்து, பள்ளிப் பாடத்திட்டங்களில் உரிய மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தற்போதுள்ள நூலகங்கள் புதுப்பிக்கப்படும். 2018-–2019 ஆம் ஆண்டில், 200 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2018–-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளிலுள்ள கழிவறைகளை தூய்மையாகவும், சுகாதாரத்துடனும் பராமரிப்பதற்காக, 2017–-2018 ஆம் ஆண்டில் 54.50 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.




104. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கி வருகிறது.2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம் 1,653.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகையாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 313.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
105. மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கும் முறையினை மேம்படுத்துவதற்காக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இணையவழி மூலமாகக் கற்கும் வகுப்பறைகள் 770 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. 3,000 தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 60 கோடி ரூபாய் செலவில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் 3,090 உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளிலும் 462.60 கோடி ரூபாய் செலவில் 10 முதல் 20 கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படுவது உறுதிப்படுத்தப்படும். பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதற்கு, 2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
106. ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ மற்றும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின்’ கீழ், முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை, முறையே 1,312.04 கோடி ரூபாய் மற்றும் 934.10 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்காத நிலையிலும், இத்திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. 2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காகவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காகவும், முறையே 1,750 கோடி ரூபாய் மற்றும் 850 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை’ திறம்படச் செயல்படுத்திட, 2018-–2019 ஆம் ஆண்டிற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
107. பள்ளிக்கல்வித் துறைக்காக, 2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 27,205.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக