ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன்
ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது
நாட்டின்
அவர், ஆசிரியர் பணிக்கே, இலக்கணம் வகுத்தவர். தன் ஆழ்ந்த அறிவால், ஆற்றல்
மிக்க அயராத உழைப்பால், மாணவர்கள் மனதில், இடம் பிடித்தவர். "ஆசிரியர்
பணியை, நேசிக்கும் ஆசிரியரே, நல்லாசிரியராகத் திகழ முடியும்; அத்தகைய
ஆசிரியரே, மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி,
டாக்டர் அப்துல்கலாமின் கருத்து. அவரும் ஒரு நல்லாசிரியர். ஆசிரியர் பணி
என்பது, அறப்பணி. இப்பணியை, ஒரு தொழில் என்று குறிப்பிடுவதை விட, சேவை
என்று குறிப்பிடலாம். இந்த சேவை, ஒரு சிறந்த நாட்டை உருவாக்க, மிகவும்
தேவை. நம் அகவிருள் அகற்றி, அறிவொளி பரவச் செய்பவர்கள் ஆசிரியர்கள். அதனால்
தான், அவர்கள், தாய்க்கும், தந்தைக்கும் அடுத்தபடியாக
மதிக்கப்படுகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று, போற்றுதலுக்கு
உரியவர்கள் ஆசிரியர்கள். எதிர்காலத்தில், நாட்டை நிர்வகிக்கிற தலைவர்களை,
ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். அதனால் தான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
"இந்நாட்டை யாம் ஆள எம்மைப்பயிற்றுவிக்கும் தென்னாட்டுத் தீரர்
செழுந்தமிழர் ஆசிரியர்' என்று குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள், அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆசிரியர்களோ,
அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கின்றனர். நாட்டின் எதிர்கால சிற்பிகளை
உருவாக்குகின்றனர். அதனால் தான், ஒரு நாட்டின் தலைவிதி, வகுப்பறைகளில் தான்
நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்று உருவானது. ஆசிரியர்கள், ஆயுட்கால
மாணவர்கள். அவர்கள், நிரம்ப படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு,
படித்து, ஆற்றலை வளர்த்துக் கொண்டால் தான், மாணவர்கள் எதிர்பார்ப்பை,
நிறைவு செய்ய முடியும். அவர்கள் ஐயங்களை நீக்க முடியும். ஒவ்வொரு
துறையிலும், நடைபெற்று வரும் ஆய்வுகள் வாயிலாக, வெளிவரும் உண்மைகளை,
அந்தந்தத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய
மாணவர்கள், பத்திரிகைகள், "டிவி' மற்றும் இணையதளம் வழியாக, பல செய்திகளை
அறிந்து, விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். எனவே, அவர்கள், அவற்றை விடத்
தெளிவான விளக்கங்களை, வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு சராசரி ஆசிரியர், புத்தகங்களில் தான் படித்தவற்றை, வகுப்பறையில்
தெரிவிக்கிறார். சில ஆசிரியர்கள், விளக்கமும் அளிக்கின்றனர். ஆனால்,
உயர்ந்த ஆசிரியர், தான் அளிக்கும் விளக்க உரைகள் மூலம், மாணவர்களின்
சிந்தனையைத் தூண்டுகிறார். அவர்களின் ஆற்றல் வளர வழி செய்கிறார். ஆற்றல்
மிக்க ஆசிரியர்கள், மாணவர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்;
போற்றப்படுகின்றனர். ஆசிரியர்கள் ஒழுக்க சீலர்களாகவும், உயர்ந்த
பண்பாடுடையவர்களாகவும் திகழ வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத் தான்,
மாணவர்கள் தங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.
நல்ல ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக, அரசு, ஆண்டுதோறும், நல்லாசிரியர்
விருதுகளை, சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. மாணவர்களுடைய
வெற்றியைக் கண்டு, பெற்றோருக்கு நிகராக மகிழ்ச்சியடைபவர்கள் தான்
ஆசிரியர்கள். அவர்களுக்கு, மாணவர் சமுதாயம், நல்ல மரியாதை அளிக்க வேண்டும்.
"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல்
நன்றே' என்பது, இலக்கியம் வலியுறுத்தும் உண்மை. உறுபொருள் அல்ல, ஒரு
பொருளும் கொடுக்கா விட்டாலும், உரிய மரியாதை கொடுத்து, ஆசிரியர்களின், நல்
ஆசியை, மாணவர்கள் பெற வேண்டும். அவர்களின் எதிர்காலம், ஆசிரியர்களின்
வழிகாட்டுதலுடன், சிறப்புற அமையவேண்டும். எவ்வித எதிர்பார்ப்புமின்றி,
அனைத்து மாணவர்களுக்காகவும் உழைக்கிற ஆசிரியர்களின் நல்வாழ்விற்காக, நாம்,
ஆசிரியர் தினத்தில், இறைவனை வேண்டுவோம். உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு!
தொடரட்டும் அவர்களின் நற்பணி!
சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962,
மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது
பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர்.
அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என
கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு
கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக
கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்;
அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.
ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். இதை யாரும்
மறுத்து சொல்ல முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக்
கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர்,
மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர்
பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள்.'மாதா, பிதா,
குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை
ஆசிரியருக்கு வழங்க இருக்கிறார்கள். இறைவனுக்குக் கூட ஆசிரியருக்கு அடுத்த
இடம்தான்.
அறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும்
போற்றி பாராட்டுவோம். ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய
நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள
சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை வீராசாமி புரோகிதர். தன்
திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும்,
இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..!
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன
நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன.
இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும்
அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர்
ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா
கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133. இவர்
1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில்
அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப்
பெயரிடப்படுள்ளது. ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில
விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு
முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது'
என்னும் பெயரில் வழங்கி வருகிறது.
இந்தியாவின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர்
ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் அவருடைய
பெயரில் அமைந்துள்ள (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அவருடைய சொந்த பங்களாவில்
இறுதி காலம் வரை வாழ்ந்தார்.அவர் எப்படி படாடோபமின்றி வாழ்ந்தாரோ அதே போல்
அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட
நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 'கிரிஜா' என்று பெயரிடப்பட்டுள்ள
இந்த பங்களாவில் இப்போது டாக்டர் ராதா கிருஷ்ணனின் மருமகள் இந்திரா கோபால்
வசித்து வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய புத்தகங்கள், பேனா
உள்பட அனைத்து பொருட்களும் அவர் பயன்படுத்திய நிலையில் அப்படியே காட்சிப்
பொருளாக வைக்கப்பட்டு உள்ளன. ஆசிரியருக்கு மாணவர்கள் குருதட்சணையாக வீடு
கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு
நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன
மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர்
வெங்கட்டராமன். இவர் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவர்.
அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி திறன் பெற்றிருந்தார்.
வெங்கட்டராமனின் "தமிழ் வகுப்பு" என்றாலே மாணவர்களுக்கு தெவிட்டாத
மகிழ்ச்சியை தந்தது. அத்தோடு அனைவரிடமும் அன்புடனும் பழகி வந்தார்.
ஆசிரியர் பணியோடு அவர் நிற்கவில்லை. ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை
காட்டினார். ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மைதான் அவரது சொத்தாக இருந்தது. குடி
இருப்பதற்கு வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். எத்தனையோ
மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை காணச் செய்த இந்த ஆசானின் வாழ்க்கை
நிலையை கண்டு முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு "குரு தட்சணை"யாக வீடு
கட்டி கொடுக்க தீர்மானித்தனர்.
அவரிடம் படித்து தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ள முன்னாள்
மாணவர்கள் பலர் குரு பக்திக்கு இலக்கணமாக திகழும் வகையில் மன முவந்து
வழங்கிய நிதியினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு (குரு நிவாஸ்)
குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் கட்டப்பட்டது. 2009-ம் ஆண்டு
ஆசிரியர் தினத்தன்று புதிய வீட்டின் கிரகபிரவேசம் கோலாகலமாக
நடந்தது.விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன்
அட்சதை தூவி வாழ்த்தினார். முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள்
போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்
தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
கிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமன் கூறும் போது, "சிறிய அளவில்
செய்வதாக சொன்னார்கள். கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிதாக செய்திருப்பதை
கண்டு நெஞ்சம் மகிழ்கிறது" என்றார்.தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு
தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால்
மிகை இல்லை.ஆசிரியர் என்பவர் வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும்
ஒளியுண்டாக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் , உயர்வு உண்டாக்கும் பெரும்
பொறுப்பு உடையவர்கள்.
ஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞ்ர்,ஓதுவார், பார்ப்பார்,
புலவர் என பலப்பெயரால் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டாலும் ,குற்றமில்லாமை,
நூல்தேர்ச்சி , செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர்
எனும் சிறப்பியல்புகள் இல்லை எனில் ஆசிரியர் என்பர் ஒரு சாதாரண
மனிதரே.மொராச்சி தேசாய் ஒரு முறை செய்தியாளர்கள் ஒரு மாநில முதல்வரை
சுட்டிக் காட்டி நீங்கள் ஏன் அவரை கண்டிக்க வில்லை என்ற கேள்விக்கு பதில்
கூறும் போது,"நான் என்ன பள்ளி ஆசிரியனா , கண்டித்து கூறுவதற்கு ? கேட்டுக்
கொண்டுள்ளேன் " என்றாராம்.
கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது. நாம் ஆசிரியர்களாக இருந்து
கண்டிக்கும் போது எந்த மாணவனும் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தற்கொலைக்கு முயல
மாட்டான். மாணவன் மனம் உணாரும் விதமாக நாம் தண்டிக்க வேண்டும். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். வளர்ந்த மாணவன், தவறு செய்துவிட்டான்,
அவனை துணைவேந்தர் அழைக்கிறார், ஒரு பிரம்பை எடுத்தார் , எத்தனை ஆண்டுகள்
இங்கு பயில்கிறாய்? மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு
செய்கிறாயா ? இது யார் குற்றம் ? மாணவன் பதில் கூறாமல் நிற்கிறான். பிரம்பை
எடுத்தார் , உன்னை கண்காணிக்காதது என் குற்றம் ..உன்னை துருத்தாது என்
குற்றம் என்று தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொண்டார். பையன் அவரின்
காலில் விழுந்து கதறி கண்ணீர் விட்டு இனி அத் அத்தவறை செய்ய மாட்டேனென்று
உறுதி கூறுகிறான். மாணவனின் தவறை உணரச் செய்தவர் துணைவேந்தர் வெண்கல
ஒலியார் சீனிவாசர் !
நாம் நம் தகுதிகளை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவு உயர்த்திக் கொள்ள
வேண்டும் . நாம் கடைக்கு செல்கிறோம் ஏதாவது ஒரு பொருளை கடைக்காரர்
கொடுத்தால் அப்படியே வாங்கி வருவோமா! அதன் தரம் , மற்றும் அது எப்போது
தயாரிக்கப் பட்டது , எப்போது வரை உபோயோகிக்க முடியும் என்று சரி பார்த்து ,
விலையை முடிந்த வரை குறைத்துப் பேசி வாங்குகிறோம். அது போல் தான் எதிலும்
என்பதை உணர்ந்து நாம் தகுதி உள்ளவராக மாற வேண்டும்.ஆசிரியர் தினம்
கொண்டாடும் நாம் ....அவரின் (டாக்டர் ராதாகிருஷ்ணன் ) வாழ்வில் நடந்த ஒரு
நிகழ்வை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு முறை தம் கண்ணை ஆய்வு செய்வதற்காக கண் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
மருத்துவர் அவரை ஒரு இருக்கையில் அமரச் செய்து பரிசோதிக்க ஆயுத்தமானார்.
அப்போது மருத்துவர் ராதகிருஷ்ணானிடம் தங்கள் மடியில் உள்ள குழந்தையை கீழே
இறக்கி வையுங்கள் என்றார். நம் ஆசிரியர் திகைத்தார். ஏனனெனில் அவர் மடியில்
வைத்திருந்தாது தன் தலைபாகையை . தலைபாகைக்கும்,குழந்தைக்கும் வேறுபாடு
தெரியாத கண்ணொளியுடைய மருத்தவரிடம் தாம் மருத்துவம் செய்ய விரும்பாதவராய்
விடை பெற்று சென்றார்.குறையுடைய பார்வையர் குறையுடைய பார்வையருக்கு
மருத்துவம் செய்தல் குறையுடையதாகும் என்பது இராத கிருஷ்ணன் கருத்து. அது
போல தெளிவு பெற வந்த மாணவர்களுக்கு தெளிவிலாத ஆசிரியர் தெளிவு காட்ட
முடியாது என்பது அவர் கருத்து.
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்ளார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழ மாறே "
-திருமூலர் (திரு மந்திரம் 1680 )
திருவள்ளுவர் , தமக்கு தெளிவில்லாத ஒன்றில் ஒருவர் ஈடுபாடுவதே அவர்க்கு இழிவு என்பதை 464 வது குறளில் கூறுகிறார் .
"தெளிவி லதனைத் தொடங்கார் இனிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர் "
ஆகவே, ஆசிரியர்களாகிய நாம் நம் தகுதிகளை வளர்த்துக் கொண்டு வகுப்பறையை
இனிமையானதாக மாற்றி , நம் கடமைகளை உணர்ந்து சிறப்பாக செயல் படவேண்டும்.ஒரு
பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக்கூடம் மூடப்படுகிறது
என்பது பொருள் . ஆகவே , அந்த பொருள் உணர்ந்து தம் தகுதிகளை மேம்படுத்தி
ஆசிரியர்கள் தம் பணியினை செய்திட வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக