BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

9 மே, 2018

#சட்டம் #அறிவோம் #சங்கத்தை #பதிவு #செய்வது #எப்படி?

ஒரு சங்கத்தின் செயல்பாடுகள் என்பது அச்சங்கத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையேயான உள்விவகாரம். எனவே நீதிமன்றங்கள் சங்கம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில் சாதாரணமாக தலையிடுவதில்லை. ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது சங்கத்தின் நடவடிக்கை அதற்குரிய வரம்புகளை மீறியும், சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு முரண்பாடாகவும், உறுப்பினர்களின் தனிமனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதாக புகார் எழுமானால் நீதிமன்றங்கள் தலையிடக்கூடும். நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை சங்கங்களின் செயல்பாடுகள் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 க்கு உட்பட்டிருக்க வேண்டும்.
1975 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், அதற்குரிய தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகளுடன் 22.4.1978 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு மத்திய சட்டமான "1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம்" அமலில் இருந்தது.

மேற்படி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம் சமுதாயத்தில் ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுகிறது. ஒரு காலகட்டத்தில் சங்கங்களுக்கு அத்தகைய சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது ஏனென்றால் அக்காலங்களில் சட்டப்பூர்வ அங்கீகாரம் என்பது, தனி மனிதர்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள் (Partnerships) மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் (Corporate Companies) ஆகியவைகளுக்கு மட்டுமே இருந்தன இந்த சட்டத்தை பொறுத்தவரை நிறுவனங்களுக்கும் (Companies) சங்கங்களுக்கும் (Societies) இடையே உள்ள வேறுபட்ட ஒரு அம்சம் என்னவென்றால், பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமானது கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அதனுடைய உறுப்பினர்களிடையே பிரித்துக் கொடுக்கப்படும். ஆனால் ஒரு சங்கத்தை பொறுத்தவரை அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அதனுடைய சொத்துக்களில் அதன் உறுப்பினர்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது.
பிரிவு - 42 :
அதாவது மேற்படி சட்டப்பிரிவு 42 ன்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம், கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானால் அவ்வாறு கலைக்கப்பட பிறகு, அச்சங்கத்தால் கொடுக்கப்பட வேண்டிய தொகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, அச்சங்கத்திற்குரிய சொத்துக்கள் ஏதேனும் மீதம் இருக்குமானால், அச்சொத்து அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட மாட்டாது மாறாக சங்கத்தின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலமோ அல்லது அவ்வாறு இயற்றப்பட இயலாவிட்டால் நீதிமன்ற ஆணைப்படியோ, அத்தகைய மீதமுள்ள சொத்துக்கள் அச்சங்கத்தை போன்ற குறிக்கோளுடன் செயல்படும் பதிவு செய்யப்பட்ட வேறு ஒரு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 இல் உள்ள ஒரு புதிய அம்சம் என்னவென்றால் சங்கங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 4 ன்படி, எந்தவொரு சங்கத்தில் 20 க்கும் குறையாத உறுப்பினர்கள் உள்ளார்களோ அல்லது சங்கத்தின் ஆண்டு வரவு - செலவு ரூபாய் 10,000/-க்கு மேல் உள்ளதோ அச்சங்கம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய சங்கம் ஆகும்.
புதிதாக துவக்கப்படும் சங்கம் அமைக்கப்பட இருக்கும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அச்சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு சங்கத்தை தோற்றுவித்தலும், பதிவு செய்தலும் :
பிரிவு 3 மற்றும் விதி 3 இல் கூறப்பட்டுள்ள நோக்கங்களையும், பயனுள்ள குறிக்கோள்களையும் கொண்ட சங்கங்களை தோற்றுவித்து பதிவு செய்யலாம்.
உடல் ஊனமுற்றோரின் நலன், வேலை செய்யும் பெண்களின் நலன், வேலை வாய்ப்பற்றோர் நலன், சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணிகளின் நலன், கைவிடப்பட்டோர் நலன் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அளவில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் நலன் போன்றவை விதி 3 இல் கூறப்பட்டுள்ள பயனுள்ள குறிக்கோள்களில் சிலவாகும்.
(ஆ) சங்கத்தை ஆரம்பிக்க தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை :
ஒரு சங்கத்தை தோற்றுவிப்பதற்கு குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் தேவை (பிரிவு 3(2))
பிரிவு 7 ன்படி பதிவு செய்யத் தாக்கல் செய்யப்படும் விவரக்குறிப்பிலும் (Memorandum) சங்கத் தனி நிலைச் சட்ட விதிகளிலும் (Bye - laws) குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.
சங்கத்தின் அலுவல்களை நடத்த குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை (Committee) சங்க மொத்த உறுப்பினர்கள் சாதாரணப் பெரும்பான்மையில் ( Simple Majority) தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவை நிர்வாக குழு அல்லது செயற்குழு (Executive Committee) என்றும் அழைக்கலாம்.
அதாவது நிர்வாக குழுவில் தலைவர், துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள், செயலாளர், துணை செயலாளர் அல்லது துணைச் செயலாளர்கள், பொருளாளர், நிர்வாககுழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை கொண்டவர்கள் இருக்கலாம்.
(இ) சங்கத்தை பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
நிர்வாககுழு உறுப்பினர் ஒருவரால் அல்லது அக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒருவரால், மாவட்ட பதிவாளர் முன்பு கீழ்க்கண்ட ஆவணங்களை தாக்கல் செய்து சங்கம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து பிரிவு 4(1) இல் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிய தேதியிலிருந்து 3 மாத காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1. விதிகளின் பிற்சேர்க்கையில் (Schedule) கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்டுள்ள படிவ எண் 1
2. சங்க விவரக்குறிப்பு (Memorandum of Association)
3. சங்கத் தனி நிலைச் சட்ட விதிகள் (Bye - laws of the Society)
4. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 5
5. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 6
பதிவுக் கட்டணம் தற்போதுள்ள நிலவரப்படி ரூபாய் 500 செலுத்தப்பட வேண்டும்.
படிவ எண் 1 என்பது, மாவட்ட பதிவாளருக்கு சங்கத்தை பதிவு செய்யக் கோரும் விண்ணப்பம் ஆகும்.
படிவ எண் 5 என்பது, பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இருக்குமிடம் பற்றிய விபரத்தையும், மாற்றம் ஏற்பட்டால் அதைப்பற்றிய விபரத்தையும் தெரிவிக்கும் படிவம் ஆகும்.
படிவ எண் 6 என்பது, சங்க உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் கொண்ட பதிவேடு ஆகும்.
சங்க விவரக்குறிப்பு என்பது சங்கத்தின் பெயர், சங்கத்தின் குறிக்கோள் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றிய விபரங்களை கொண்ட விவரக்குறிப்பு ஆகும். இத்துடன் சங்கத்தின் தனி விதிகளையும் (Bye - laws) இணைப்பாக கொண்டதாகும்.
சங்கத்தின் தனி நிலைச் சட்ட விதிகள் (Bye - laws) விதி 6 இல் கூறப்பட்டுள்ள விபரங்களை கொண்டிருக்க வேண்டும்.
சங்கத்தின் பெயரும், பெயர்ப் பலகையும் :
சங்கத்தின் பெயர் சட்டப் பிரிவு 9 இல் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க இருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிற ஒரு சங்கத்தின் பெயரையோ, கூட்டுறவு, நிலவளவங்கி, இந்திய மத்திய வங்கி போன பெயர்களையோ சேர்க்கக்கூடாது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அவர்களது அலுவலகம் இருக்கும் இடத்தில் சங்கப் பெயர் பலகையை வைக்க வேண்டும். பெயர் பலகை எந்த மொழியில் இருந்தாலும் "தமிழிலும்" வைக்கப்பட வேண்டும். (பிரிவு 13)
சங்க உறுப்பினர்களும், உறுப்பினர் பதிவேடும் :
ஒரு சங்கத்தின் உறுப்பினர்கள், சாதாரண உறுப்பினர்கள் (Ordinary Members) ஆயுள் உறுப்பினர்கள் (Life Members) மற்றும் காப்பாளர்கள் (Custodians) என பல வகைகளால் இருக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய சந்தா தொகையினை சங்கம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு சங்கமும் படிவம் எண் 6 குறிப்பிட்டுள்ளபடி உறுப்பினர் பதிவேட்டை பராமரித்து வர வேண்டும். உறுப்பினர்கள் சேர்ந்த தேதி மற்றும் விலகிய தேதி போன்றவற்றை உடனுக்குடன் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
சங்க பொதுக்குழுவும், செயற்குழுவும் :
சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்த அமைப்பு, சங்கத்தின் பொதுப் பேரவை (General Body) அல்லது பொதுக்குழு எனப்படும். பொதுக்குழு கூட்டம் ஆண்டுக் ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும்.
சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் குழு, நிர்வாக குழு (Executive Committee) அல்லது செயற்குழு எனப்படும்.
செயற்குழு எனப்படும் நிர்வாக குழுவில் குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் அதிகபட்ச உறுப்பினர்கள் பற்றி சட்டத்தில் குறிப்பிடப்படாததால், சங்கத்தின் தனிநிலைச் சட்ட விதியில் (Bye laws) கூறப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிர்வாக குழு உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
ஒவ்வொரு ஆண்டிலும் நிர்வாக குழு எத்தனைமுறை கூட வேண்டும், எத்தனை நாட்களுக்கு முன்பாக கூட்டம் பற்றிய அறிவிப்பு கொடுக்க வேண்டும், அக்கூட்டத்துக்கான குறைவெண் வரம்பு (வர வேண்டியவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை எவ்வளவு) போன்றவைகளுக்கு சங்கத்தின் துணை விதிகளில் (Bye laws) நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
சங்கம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் :
சட்ட விதி 18 ன் படி (Rule 18) ரொக்கப் பதிவேடு (cash book), பற்றுச்சீட்டுப் புத்தகம் (receipt book), சான்று சீட்டு கோப்பு (voucher file), பேரேடு (ledger), மாதாந்திர பதிவேடு (monthly register), கடித போக்குவரத்து கோப்புகள், நிகழ்ச்சி குறிப்பு பதிவேடுகள் (Minutes book) போன்ற பதிவேடுகள் சங்கத்தால் பராமரிக்கப்பட வேண்டும்.
பிரிவு 16 மற்றும் விதி 19 ன்படி ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உள்ள ஒவ்வொரு நிதி ஆண்டு முடிந்ததும், சங்கத்தின் அந்த நிதி ஆண்டுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வரவு - செலவு அற (income and expenditure statement), இருப்பு நிலை கணக்கு ஏடு (balance sheet) முதலியவை தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்டு, நிதி ஆண்டு முடிந்த 6 மாதத்திற்குள் பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் (approval) பெறப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் பதிவாளருக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள் (பிரிவு 16& விதி 22):
நிதி ஆண்டு முடிந்த 6 மாதங்களுக்குள், சங்கம் தனது பொதுக்குழுவை கூட்டி தணிக்கையாளரின் அறிக்கையை தாக்கல் செய்து, பொதுக்குழுவின் அங்கீகாரத்தை பெற வேண்டும் அந்த பொதுக்குழு கூட்டம் முடிந்த 6 மாதங்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
1. வரவு - செலவு கணக்கு மற்றும் இருப்பு நிலை அறிக்கை
2. தணிக்கையாளரின் அறிக்கை
3. கணக்கு ஆண்டு முடிந்த கடைசி நாளில், சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொழில் பற்றிய விபரங்களுடன் கூடிய பட்டியல்
4. சங்கம் பணியாற்றி வருவது பற்றிய உறுதிமொழி (பிரிவு 16(3)(b)(iii) இல் கண்டுள்ள படி)
5. தேர்தல் நடத்தப்படும் பொதுக்குழுவிற்கு பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் விவரம்
(குறிப்பு - தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 இல் கண்டுள்ள சில முக்கியமான விவரங்களை மட்டுமே இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வழக்கறிஞர்களையோ அல்லது சட்டப் புத்தகத்தையோ அணுகலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக