BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

27 மார்., 2018

புதிய தொழில்நுட்பம், தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள்: அச்சிடும் பணி தீவிரம்

புதிய தொழில்நுட்பம், தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள்: அச்சிடும் பணி தீவிரம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1,6,9,11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு புதிய தொழில்நுட்பம், கூடுதல் தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழகப் பள்ளிகளில் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி கற்றல், கற்பித்தல் பணி நடைபெறவுள்ளது. புதிய பாடநூல்களைத் தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டுக்கு ஒருசில மாதங்கள் இருப்பினும் புதிய பாடநூல்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'லேமினேஷன்' செய்ய திட்டம்: இந்த நான்கு வகுப்புகளுக்கு மட்டுமே 100-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல்கள் அச்சிடப்படவுள்ளன. நல்ல தரம் கொண்ட 80 ஜிஎஸ்எம் தாளில் இவை தயாராகி வருகின்றன. ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் எழில்மிகு வண்ணத்தில் துல்லியமான படங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய பாடநூல்களின் அட்டை 230 ஜிஎஸ்எம் தரம் கொண்டது. இது சற்று கடினத்தன்மையுடன் இருக்கும். இருப்பினும் அட்டை கிழிந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் அனைத்து பாடநூல்களுக்கும் 'லேமினேஷன்' (வழவழப்பான காகித பாதுகாப்பு) செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

செல்லிடப்பேசிகளில் ஸ்கேன் செய்து... புத்தகங்களில் உள்ள முக்கியப் பகுதிகளில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து, கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள 'க்யூ.ஆர் குறியீடு' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டை 'ஆண்ட்ராய்ட்' வசதி கொண்ட செல்லிடப்பேசி மூலம் ஸ்கேன் செய்து இணையதள லிங்க் மூலம் தொடர்புடைய விஷயங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற முடியும். அதேபோன்று 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான அனைத்துப் பாடநூல்களிலும் பாடங்கள் குறித்த தகவல்களுடன், வேலைவாய்ப்பு, பொதுவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எப்போது முடிவடையும்? குறைவான பக்கங்களில் பாடநூல்களை தயாரிப்பதால் மட்டுமே மாணவர்களின் சுமையைக் குறைத்து விட முடியாது. பக்கங்களைக் குறைத்தால் எழுத்துகளின் அளவும் மிகச் சிறியதாகிவிடும். அவற்றை மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுவர். இதனால் புதிய பாடநூல்களில் பக்கங்கள் எப்போதும் போலவே இருக்கும்.

புதிய பாடத்திட்ட அடிப்படையிலான நூல்கள் மே மூன்றாவது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாடத்திட்டம் தவிர்த்து எஞ்சியுள்ள வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வகுப்புகள் நடைபெறும் என்பதால் அவற்றுக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்று விட்டது. அந்த வகுப்புகளுக்காக மொத்தம் 4.5 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்துப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக